NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

புரூஸ் லீ ரசிகன் ஓவியரானால்..!- சென்னை வாலிபரின் அசாத்திய வாழ்க்கைப் பயணம்

எப்பவும் நம்மால் முடியாததை ஒருத்தவங்க செஞ்சாங்கன்னா ஒரு இனம் புரியாத மரியாதை வந்திடும்

சிறு வயதிலிருந்து அந்தச் சிறுவனுக்கு மதிப்பெண் சார்ந்த கல்வி மேல் அக்கறை இல்லை. தொடர்ந்து அவன் உடல் அளவிலும் மனதளவிலும் இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ள துடித்துக் கொண்டே இருந்தான். ஆனால், வழக்கம் போல ‘தன்னால் செய்ய முடியாததை யாராலும் செய்ய முடியாது’ என்று நினைக்கும் சமூகம், அவன் எங்கு இருக்கிறானோ அங்கேயே ஒடுக்கி வைக்க ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது. ஆனால், அவனால் அன்றாடங்காச்சியாக இருந்துவிட முடியாது. அவன் உடலைப் பார்த்து, ‘நீ நடக்கிறதே கஷ்டம்’ என்று உலகம் கூச்சல் இட்டுக் கொண்டிருக்க, அவன் ஓட்டப் பந்தயத்தில் சாந்தமாக கலந்து கொண்டான். புரூஸ் லீ-யின் வெறித்தனமான ரசிகனான அவனுக்கு பந்தயத்தில் கலந்து கொண்டதற்குக் கிடைத்த பாராட்டு வித்தியாசமாக இருந்தது. புதுமையாகவும் இருந்தது. உடனேயே பாடப் புத்தக்கத்தில் இல்லை நமது வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டான். நீ என்ன ஆக வேண்டுமென ஒருவர் கேட்க அந்தச் சிறுவன், ‘நான் ஆர்டிஸ்ட் அண்டு அத்லீட்’ என்று தன் வாழ்க்கைப் பயணத்தை பிரகடனப்படுத்திக் கொண்டான்.

6bnqh678

அந்தச் சிறுவனுக்குத் தற்போது 24 வயது. பெங்களூருவில் சிறிது காலம் இருந்தாலும் தற்போது சென்னையில் குடியேறிவிட்டார். இப்போது அவர் அத்லீட் அல்ல. அதகளமான ஆர்டிஸ்ட். தன் ஆன்மாவிலிருந்து வார்த்தெடுத்த ஓவியங்களை முதன்முறையாக பொது மக்கள் பார்வைக்கு அவர் வைக்கப் போகிறார். அது குறித்து மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார்.

c84sjcn

தன் பயணம் குறித்து ஷ்ரேயாஸ் ஷங்கர் என்னும் அந்த வாலிபன் அகண்ட கண்களுடனும் புன்முறுவலுடனும் பேசத் தொடங்கினார். புரூஸ் லீ-யோட ‘என்டர் தி டிராகன்’ படம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். அவர் மனுஷங்களோட எல்லைய தொடர்ந்து உயர்த்திகிட்டே போனாரு. மற்றவங்க செய்ய முடியாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போதே அவர் செஞ்சு காட்டினாரு. எப்பவும் நம்மால் முடியாததை ஒருத்தவங்க செஞ்சாங்கன்னா ஒரு இனம் புரியாத மரியாதை வந்திடும். எனக்கு அப்படித்தான் புரூஸ் லீ மேல. ஒரு வெறித்தனமான பற்று வந்துச்சு. அவர் மேல மட்டுமில்ல. வாழ்க்கையில மனுஷங்களோட எல்லைய தொடர்ந்து உயர்த்திகிட்டே போறவங்கள பார்த்தா ஆச்சரியமா இருக்கும். நம்பளும் அப்படி பண்ணனும்னு வேட்கை வரும். அப்படி ஆரம்பிச்சது தான் எக்சர்சைஸ், களரி பயிற்சியெல்லாம். தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில கலந்துக்குறது, மாரத்தான்ல கலந்துக்குறதுன்னு என்னோட எல்லைய உயர்த்திகிட்டே இருந்தேன்.

cas6dt5

ஒருமுறை நாடகம் ஒண்ணுல நடிக்கறதுக்காக தடாலடியா 25 கிலோ குறைச்சேன். ஜஸ்ட் அந்த நாடக்கத்தில நடிக்கிறதுக்காக மட்டும். அப்புறம் திரும்ப பழையபடி மாறினேன். நம்ப உடம்பில இல்ல மனசுல தான் எல்லாம் இருக்குன்னு புரிய ஆரம்பிச்சுது. தொடர்ச்சியா, யோகா பண்ணேன். தியானம் பண்ணேன். அது எனக்குள்ள இருக்கிற என்னை காட்டுச்சு. பல கதவுகள அது திறந்து விட்டச்சு. தொடர்ந்து என்னை அடுத்தக்கட்டத்துக்கு உந்தி தள்ளுச்சு. அப்போதான் முடிவு பண்ணேன். வெறுமனே உடல் அளவில சாதிக்கிறது எனக்கு போதாதுன்னு. என் ஆன்மாவுல தெரிஞ்ச ஓவியங்கள வரைய ஆரம்பிச்சேன். நான் தியானம் பண்ணும் போது என் உடம்புல ஏற்பட்ற மாற்றத்த வரைய ஆரம்பிச்சேன். என்னையே நான் வரைய ஆரம்பிச்சேன். என் மனசில தோன்றின பல கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தேன். ஓவியம் தான் என்னோட வாழ்க்கைங்கறத முடிவு பண்ணேன். இப்போ, என் ஓவியங்கள கண்காட்சிக்கு வைக்கிற அளவுக்கு வரைஞ்சிருக்கேன்’ என்று உற்சாகம் ததும்ப ததும்ப தன் பெரும் பயணத்தைப் பற்றி சொன்னார்.

4ukiktig

ஷ்ரேயாஸிடம் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது, ‘கண்டிப்பா ஓவிய காட்சிக்கு வந்திடுங்க. நிறைய பேசுவோம்’ என்றவர், ‘ஒருத்தனை மாற்றுத்திறனாளி என்ற உடல் அளவீடுகளைத் தாண்டி அவன் திறமையால அவனை எடைபோடும் உலகம் சீக்கிரமே உருவாகும். அன்று கலைஞன் கலைஞானாக மட்டுமே தெரிவான்’ என்றார் நம்பிக்கையுடன்.

Comments

வரும் 26 ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ஆர்ட் கேலரியில் ஷ்ரேயாஸ் ஷங்கரின் ஓவிய காட்சி நடைபெறுகிறது. அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT