NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

35 பேருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்மணி - கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

கேரள வெள்ளம் இந்தியாவை உலுக்கியது. வெளியில் இருந்து பணம், உணவு, உடை என பல்வேறு உதவிகள் கேரள மக்களைச் சென்றடைந்தன

கேரள வெள்ளம் இந்தியாவை உலுக்கியது. வெளியில் இருந்து பணம், உணவு, உடை என பல்வேறு உதவிகள் கேரள மக்களைச் சென்றடைந்தன. ஆங்காங்கே முகாம்கள் திறக்கப் பட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப் பட்டு தங்க வைக்கப் பட்டனர். இதற்கிடையில் தனது வீட்டில் 35-க்கும் மேற்பட்டவர்களை 10 நாட்களுக்கும் மேலாக தங்க வைத்திருக்கிறார் திருவல்லாவைச் சேர்ந்த எலிசபெத் கோஷி என்ற பெண். இதைக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்புக் கொண்டோம்.

"எங்கள் அக்கம் பக்கத்து வீடுகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தன. நல்ல வேளையாக எங்கள் வீட்டிற்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை. பெரியவர்கள், சின்னக் குழந்தைகள் என அனைவரும் அந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது என் மனதை என்னவோ செய்தது. எனது பிள்ளைகள் வேறு இடத்தில் இருக்கிறார்கள். நான் தனியாகத்தான் இருக்கிறேன். எங்களுக்குச் சொந்தமான வாடகை வீடு ஒன்றும் இருக்கிறது. அதனால் அவர்களை அழைத்து வீட்டில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தேன்.

இடம் கொடுத்ததும் நம் கடமை முடிந்தது என்று என்னால் இருக்க முடியவில்லை. உடனே அனைவருக்கும் உணவும் தயாரிக்க ஆயத்தமானேன். வந்தவர்களில் இருந்த பெண்கள் சமையல் வேலைகளுக்கு ஒத்தாசையாக இருந்தனர். 35 -க்கும் அதிகமானவர்கள் இருந்ததால் 2 நாட்களில் வீட்டிலிருந்த சமையல் பொருட்கள் எல்லாம் தீர்ந்த்துப் போனது.

எனக்கு விபரம் தெரிந்து இப்படியொரு வெள்ளத்தை இப்போது தான் கேரளாவில் பார்த்திருக்கிறேன். வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு வெள்ளம் வேறு. மீறி போனால் நிச்சயம் கடைகள் இருக்காது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தப் போது, மீட்புக் குழுவினரும், தன்னார்வலர்களும் பாதிக்கப் பட்டிருப்பவர்களை மீட்பதற்காக வந்தார்கள். அவர்களிடம் நிலைமையை சொன்னபோது, சமையலுக்குத் தேவையானப் பொருட்கள், தண்ணீர், மெழுகுவர்த்தி, நாப்கின் உட்பட அத்தியாவசியப் பொருட்களை தினம் கொண்டு வந்துக் கொடுக்க ஆரம்பித்தனர். எங்கள் வீட்டில் இருப்பவர்கள், வெளியில் ஆங்காங்கே இருப்பவர்கள் என எல்லாருக்கும் உணவு சமைக்கப் பட்டது.

உண்மையிலேயே இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். ஏனென்றால், நான் வீட்டில் எப்போதும் தனியாக இருப்பவள். ஆனால் இந்த வெள்ளத்தால் எங்கள் வீடு திருவிழாக்கோலம் பூண்டது. கஷ்டத்திலும் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணம் அது. மின்சாரம், செல்ஃபோன் சிக்னல் என எதுவுமே இல்லாததால், சமையல் நேரம் போக மீதமிருந்த நேரங்களில் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடிந்தது. அக்கம் பக்கத்தினர் என்பதால் அவர்களை எனக்கு முன்பே தெரியும். ஆனால் மிக நெருக்கமானது இந்த வெள்ளத்தினால் தான்.

இந்த கஷ்டத்தை மறந்து மகிழ்ச்சியைக் கொண்டு வர அனைவரும் ஓணம் பண்டிகையை ஒன்றாகக் கொண்டாடினோம். கேரளா முழுவதுமே வெள்ளத்தால் மூழ்கியதால், ஓணம் கொண்டாடப் படவில்லை. ஆனால் எங்கள் வீட்டில் இருந்தவர்களை மகிழ்விக்க, ஓணத்திற்காக ஸ்பெஷல் உணவுகள் தாயாரித்து பண்டிகையைக் கொண்டாடினோம். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு அன்று மாலை அவரவர் வீடு திரும்பினர். நிறையப் பேருக்கு வீட்டைப் பழுதுப் பார்க்க வேண்டிய நிலை. இன்னும் கூட ஒரு குடும்பத்தினர் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. நம்மால் சிலருக்கு உதவ முடியுமென்றால், யோசிக்காமல் செய்து விடுவது தான் நற்பண்பு. அதைத்தான் நானும் செய்தேன். கஷ்டப் படுவோருக்கு உதவும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. நீங்களும் ஒருமுறை செய்துப் பாருங்கள்!" எனப் புன்னகைக்கிறார் எலிசபெத்.

Comments

- ஷாலினிஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT